கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre)பிரிவினை அச்சுறுத்தல்களின் சூழலில் தேசிய ஒற்றுமையை பாதுகாக்கும் நோக்கில் தமது கட்சி செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
அல்பெர்டாவில் மாகாணப் பிரிவினையை முன்னிறுத்தும் இயக்கம் வலுப்பெற்று வரும் நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி ஒன்றுபட்ட கனடாவுக்காகப் போராடும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நிருபரின் கேள்விக்கு பதிலளித்த போது, கன்சர்வேட்டிவ் கட்சியினர் “முழுமையாக கூட்டாட்சி ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட குழுவாக” இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
ஸ்ரே ப்ரீ அல்பெர்டா(Stay Free Alberta) எனப்படும் அமைப்பு, அல்பெர்டா மாகாணம் தனி நாடாக மாறுவதற்கான பொதுக்கணிப்பு வாக்கெடுப்பை நடத்த முனைந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக, மே மாதத்திற்குள் சுமார் 1,78,000 கையெழுத்துகளை திரட்ட வேண்டியுள்ளது.
மாகாணங்கள் ஒருதலைப்பட்சமாக நாட்டிலிருந்து பிரிய முடியாது; ஒரு பொதுக்கணிப்பு வெற்றியடைந்தால், அது மாகாண அரசு, கூட்டாட்சி அரசு மற்றும் முதல் நாட்டின மக்களது (First Nations) பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்புகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் நிலையை உருவாக்கும்.
ஜனவரி மாதத்தில் நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டில் நிகழ்த்திய உரையின்போது, பியர் பொய்லிவ்ரே(Pierre Poilievre) பிரிவினை இயக்கங்களுக்கு லிபரல் கட்சியின் கொள்கைகளே காரணம் என குற்றம்சாட்டினார். குறிப்பாக, ஒட்டாவா அரசு அல்பெர்டாவின் ஆற்றல் துறையிலும் கியூபெக்கின் நிர்வாக அதிகாரங்களிலும் தலையீடு செய்து வருவதாக அவர் வாதிட்டார்.