கனடாவின் மேற்கு மாநிலமான பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 08 பேர் உயிரிழந்ததோடு, 25 பேர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய நபர் சந்தேகநபராக பொலிஸாரால் அடையாள காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான ஜெஸ்ஸி வான் ரூட்ஸீலார் என்கின்ற இந்த நபர் சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்து கிடந்ததாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
முதலில் தனது வீட்டில் தாய் மற்றும் தம்பி ஆகியோரைச் சுட்டுக் கொன்ற சந்தேக நபர், பின்னர் அருகிலுள்ள பாடசாலைக்குச் சென்று அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
சந்தேக நபர் ஆணாக பிறந்து திருநங்கையாக மாறியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில், 39 வயதுடைய பெண் கல்வியாளர் ஒருவரும், 12 வயதுடைய பெண் மாணவர்கள் மூவரும், 12 மற்றும் 13 வயதுடைய ஆண் மாணவர்கள் இருவரும் அடங்குவர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சந்தேக நபர்கள் இருப்பதாக நம்பவில்லை என ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் பிரதி ஆணையாளர் டுவைன் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பாதிப்புகளுக்காகப் பலமுறை பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் இவர்களது வீட்டிற்குப் பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் அழைக்கப்பட்டனர். இதில் சில அழைப்புகள் மனநலம் சார்ந்தவையாகவும், ஆயுதங்கள் தொடர்பான முறைப்பாடுகளாகவும் இருந்துள்ளன.
சந்தேகநபருக்கு துப்பாக்கி உரிமம் இருந்ததாகவும், அது காலாவதியானது எனவும் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் தாக்குதல் நடத்திய பாடசாலையை விட்டு 04 ஆண்டுகளுக்கு முன்பு பாதியில் விலகியவர் என்பதும் தெரியவந்துள்ளது.