எந்தவொரு காரணமும் இன்றி போலீஸார் வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்யும் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மிக முக்கியமான வழக்கை கனடா உச்ச நீதிமன்றம் நேற்று விசாரிக்கத் தொடங்கியது.
இந்தச் சோதனைகள் இனப் பாகுபாட்டிற்கு (Racial Profiling) வழிவகுப்பதாகக் கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மொண்ட்ரியலைச் சேர்ந்த ஜோசப்-கிறிஸ்டோபர் லுவாம்பா என்ற கறுப்பின இளைஞர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
எந்தக் குற்றமும் செய்யாத நிலையிலும், 18 மாதங்களில் சுமார் 10 முறை போலீஸார் தன்னை வழிமறித்துச் சோதனை செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் பிடிக்கவும், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தத் தன்னிச்சையான சோதனைகள் ஒரு அத்தியாவசியக் கருவி என்று கியூபெக் மாகாண அரசு வாதிடுகிறது.
எந்தக் காரணமும் இன்றி ஒருவரை நிறுத்துவது என்பது போலீஸாரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு வழிவகுக்கிறது எனவும் இது குறிப்பாக கறுப்பின மற்றும் பழங்குடியின மக்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படுவதால், இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனவும் ஜோசப்-கிறிஸ்டோபர் லுவாம்பா தெரிவித்துள்ளார்.
கடந்த 1990-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், சாலைப் பாதுகாப்பிற்காக இத்தகைய சோதனைகள் அவசியமானவை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பல புள்ளிவிவரங்கள், இத்தகைய சோதனைகள் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை மட்டுமே அதிகம் பாதிப்பதாக நிரூபித்துள்ளன.
மேலும், கியூபெக் மாகாண நீதிமன்றங்கள் ஏற்கனவே இந்தச் சோதனைகள் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளன.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கியூபெக்கில் தன்னிச்சையான வாகனச் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.