கனடாவில் கோடை காலம் தொடங்கியவுடன் பொதுச்சேவை செய்யும் ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் பணியாற்றுவதற்கு அலுவலகங்களுக்குச் செல்லவேண்டும் என அந்நாட்டு அரசு விதித்துள்ள திட்டம் குறித்து வெவ்வேறு விதமான கருத்துக்கள் தற்போது வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் கனடாவின் திறைசேரி வாரியத் தலைவர் ஷஃப்கத் அலி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் அலுவலகத்துக்கு வரும் பணியாளர்களுக்கு போதியளவிலான பணியிடங்கள் உள்ளன எனவும். அவ்வாறு இல்லாவிட்டால் நாம் எப்படி அவர்களை அழைக்க முற்படுவோம் எனவும் கருத்துப் பகிர்ந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை ஷஃப்கத் அலி வெளியிட்ட இந்த அறிக்கை, சில நாட்களுக்கு முன் திறைசேரி வாரியம் ரேடியோ கனடாவுக்கு எதிர்மறையான தகவலை வழங்கிய பின்னணியில் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் பிரெஞ்சு மொழியில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் வகையில் வாரத்திற்கு நான்கு நாள் பணிமுறை தேவையை பூர்த்தி செய்ய சில இடங்களில் அனைத்து பணியாளர்களுக்கும் போதுமான பணிமனைகள் இருக்காமல் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, சிவில் சேவை ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்துகொண்டிருக்கின்றார்கள். இந்த விதி 2024 செப்டம்பரில் அமுல்படுத்தப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில், மத்திய அரசு ஏற்கனவே அவ்வாறு 3 நாட்கள் பணிபுரியாத ஊழியர்கள் ஜூலை மாதம் முதல் குறைந்தபட்சம் வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகப் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமன்றி அரசின் நிர்வாக அதிகாரிகள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.