ஒட்டாவா தீயணைப்பு வீரர்கள் சங்கம் (OPFFA), தங்கள் உறுப்பினர்களைப் பணியிடப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்க, அனைத்துத் தீயணைப்பு நிலையங்களிலும் சலவை இயந்திரங்கள் (washers and dryers) மற்றும் உலர்த்திகள் நிறுவுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ஒட்டாவா நகர சபையைக் கேட்டுக்கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான நகர வரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிப்பதற்கென நடந்த குழு கூட்டத்தில், இந்த கோரிக்கை, ஒரு முக்கியமான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கையாக முன்வைக்கப்பட்டது.
சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) சமீபத்தில் தீயணைப்புப் பணியை முதல் தர புற்றுநோய்க் காரணியாக அறிவித்துள்ளதன் அடிப்படையில் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது.
களத்தில் பயன்படுத்தும் சீருடைகளில் ஒட்டிக்கொள்ளும் நச்சுக்களை விரைவாக அகற்றுவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று தீயணைப்பு வீரர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
தீ விபத்துக்களில் இருந்து வெளியேறும் நச்சுகள், பாதுகாப்பு கவசத்திற்குள் கசிந்து சீருடைகளில் ஒட்டிக்கொள்வதால், அவற்றை விரைவாகச் சலவை செய்வது அவசியம் என்று அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, ஒட்டாவா நகரத்தில் உள்ள 45 தீயணைப்பு நிலையங்களில் சுமார் 15 நிலையங்களில் மட்டுமே சலவை வசதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.