இலங்கையின் ஏற்றுமதித் துறை புதுப்பிக்கப்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து உற்பத்தியை மேம்படுத்துதல், சந்தை அணுகல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கான ஆதரவு என்பவற்றை வலுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்தது.
பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில், கடந்த நவம்பர் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் வழிவகைகள் பற்றிய குழு கூடியபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் ஏற்றுமதிகள் ஒரு தசாப்தமாக அண்ணளவாக 13 – 15 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்டதாக இருந்ததாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்தார். ஆனால் அண்மைய சீர்திருத்தங்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட திட்டங்கள் இந்தத் துறை அதிக வளர்ச்சியை நோக்கிச் செல்ல உதவுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) புதிய தேசிய மூலோபாயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் பிரதான ஆலோசனைக் குழுக்களை மீண்டும் செயல்படுத்தியுள்ளதுடன், தொழிற்துறைக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் தெளிவான செயற்திறன் இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஏற்றுமதியாளர்களில் 78%ஆக உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) பங்களிப்பை அதிகரிப்பது ஒரு முக்கிய முன்னுரிமை என்றும், எனினும் அவை மொத்த ஏற்றுமதி வருமானத்தில் ஒரு சிறிய பங்களிப்பை மாத்திரமே செய்கின்றன என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, பிராந்திய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உதவிச் சேவைகள் மூலம் இந்தப் பங்களிப்பை கணிசமாக விரிவுபடுத்தும் இலக்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) எவ்வாறு கொண்டுள்ளது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு பெரிய சர்வதேச தொழில்துறை கண்காட்சியை நடத்துவதற்கு இலங்கை தயாராகி வருவது தொடர்பிலும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
அண்மைய ஆண்டுகளில் வலுவான செயற்றிறனை எடுத்துக்காட்டும் வகையில் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இலங்கை ஏற்றுமதியில் 16 – 17 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டுவதற்கான பாதையில் உள்ளது என இங்கு தெரிவிக்கப்பட்டது.
நாடு தனது அடுத்த மைல்கல்லான 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை நோக்கி நகரும்போது, தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகல் மற்றும் வலுவான தொழில் ஒத்துழைப்பு ஆகியவை இன்றியமையாததாக இருக்கும் என்று ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்தது.
இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, கே. சுஜித் சஞ்சய பெரேரா, சதுர கலப்பத்தி, செல்லத்தம்பி திலகநாதன், சமிந்த ஹெட்டியாராச்சி, நிஷாந்த ஜயவீர, சந்தன சூரியாரச்சி, திலின சமரகோன் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையை (EDB) பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.