ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, குறித்த ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் உள்ள சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காக விசாரணை கோப்புகள் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிவிப்பதற்காக கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, நீதவான் இந்த வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 10ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.
அரகலய போராட்டக் காலப்பகுதியில், மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான செவனகல பிரதேசத்தில் அமைந்திருந்த சட்டவிரோத கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன. இதற்காக, இழப்பீட்டு அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இழப்பீடாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.