2010ஆம் ஆண்டு முதல் இன்றவில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே பல்வேறு வகையிலான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை (22) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2010ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை படுகொலை, கடத்தல் மற்றும் தாக்குதல்களுக்கு இலக்கான ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதனையும் இவர்களின் பெயர்களையும், மேற்படி பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டும் பொருட்டு நடத்தப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் என்ன என்றும் முஜிபூர் ரஹ்மான் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 2010 தொடக்கம் இதுவரையில் ஒரு கடத்தல் சம்பவமும் 8 தாக்குதல் சம்பவங்களுமே பதிவாகியுள்ளன. இதன்படி பிரகீத் பண்டார எக்னலிகொட கடத்தப்பட்டுள்ளதுடன், மஹிந்த ஆரியவன்ச, தனுஸ்க சம்பத் செனவிரட்ன, பாரூக் முகமட் சுஹைல், சுப்ரமணியம் பாஸ்கரன், சமில ஜனித் குமார ஏகநாயக்க, அசங்க கிருஸாந்த பாலசூரிய, சினேஸ் உபேந்திர, இந்துனில் சிசிர விஜேநாயக்க ஆகியோர் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பிரகீத் எக்னலிகொட விடயத்தில் மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெறுகின்றன. மற்றைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.