மன்னார் – சிவாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட காயாக்குழி கிராமத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 8.7 கிலோமீற்றர் தூரமான உள்ளகவீதிச் சீரமைப்புப்பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால் மக்கள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த சீரமைப்புப்பணிகளை விரைந்து ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
சிலாவத்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற நிலையில் குறித்த கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு வலியுறுத்தினார்.
இந்நிலையில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள குறித்த உள்ளகவீதிச் சீரமைப்புப்பணிகள் விரைந்து ஆரம்பிக்கப்படுமென பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனால் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், காயாக்குழி பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டுதொடங்கப்பட்ட சுமார் 8.7கிலோமீற்றர்தூரமான உள்ளக வீதிச் சீரமைப்பு வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதி மக்கள் போக்குவரத்து செய்வதில் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதுடன், அப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்குவதாலும் பாதிப்புக்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
அவர்கள் எதிர்நோக்கும்பிரச்சினைகள் தொடர்பில் நானும்நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தேன். எனவே குறித்த வீதியைச் சீரமைப்புவேலைகள் முழுமைப்படுத்தப்படவேண்டு மெனக்கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
இந்நிலையில் இதற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன பதிலளிக்கையில், உள்ளகவீதிகளை சீரமைப்பதுதொடர்பிலே அதிக கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது. குறிப்பாக வீதிச்சீரமைப்புகளுக்கென அதிகளாவான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வீதிச் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையிலே அடுத்த ஆண்டுக்குரிய வரவுசெலவுத்திட்டத்திலும் வீதிகள் சீரமைப்பிற்கென அதிகளவு நிதிஒதுக்கீடுசெய்யப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் சுட்டிக்காட்டப்பட்ட வீதிதொடர்பிலும் கவனஞ்செலுத்தப்படும். அவ்வீதி சீரமைக்கப்படும் என்றார்.