உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கல்கிஸ்ஸை சென். தோமஸ் கல்லூரி சிறுவன் டாவி சமரவீர இந்த வருடத்தை இரண்டு உலக சம்பியன் பட்டங்களுடன் ஆரம்பித்து இலங்கைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.
பாஹ்ரெய்ன், மனாமாவிலும் கத்தார், தோஹாவிலும் நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப்களிலேயே அவர் உலக சம்பியன் பட்டங்களை சுவீகரித்தார்.
மனாமா இசா பின் ராஷித் விளையாட்டுத் தொகுதி அரங்கில் ஜனவரி 14 முதல் 18 வரை நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாஹ்ரெய்ன் தேசத்தைச் செர்ந்த யூசுப் அல்பன்னாவை 11 – 6, 9 – 11, 11 – 7, 11 – 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 – 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் டாவி சமரவீர வெற்றிகொண்டு இந்த வருடத்திற்கான தனது முதலாவது உலக சம்பியன் படத்தை சுவீகரித்தார்.
இதனைத் தொடர்ந்து தோஹா, லுசெய்ல் விளையாட்டுத் தொகுதி அரங்கில் ஜனவரி 19 முதல் 25 வரை நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சவூதி அரேபிய வீரர் ரெயான் அல்மஞ்சூமியை எதிர்த்தாடிய டாவி சமரவீசர 11 – 9, 11 – 7, 11 – 9 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் வெற்றிபெற்று இரண்டாவது உலக சம்பியன் படத்தை வென்றெடுத்தார்.
பத்து வயதான டாவி சமரவீர, கல்கிஸ்ஸை சென். தோமஸ் கல்லூரியின் 6ஆம் வகுப்பு மாணவராவார்.
டாவியும் அவரது தந்தையும் பயிற்றுநருமான ஹசித்த சமரவீரவும் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தனர்.
அவர்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள், டாவி சமரவீரவின் தாயார், சகோதரர், இலங்கை மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தயா சமரவீர ஆகியோர் உட்பட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர்.