நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அதிகரித்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் கனடிய ஆயுதப் படைகள், ஒரு விரிவான மற்றும் பிரம்மாண்டமான அணிதிரட்டல் திட்டத்தை (Mobilization Plan) வகுத்துள்ளன.
போட்டி நாடுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உள்நாட்டுப் பேரழிவுகள் ஆகிய இரண்டையும் எதிர்கொள்ளும் வகையில், தேசத்தின் பாதுகாப்புக்கு "சமூகத்தின் முழுமையான அணுகுமுறை தேவை என்று இத்திட்டம் வலியுறுத்துகிறது.
“பாதுகாப்பு அணிதிரட்டல் திட்டம் (Defence Mobilization Plan -DMP)”என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டமானது, ஆயுதப் படைகளுக்குத்துணையாக, 300,000 தன்னார்வலர்களைக் கொண்ட துணை சிவில் பாதுகாப்புப் படையை (Supplementary Civilian Force) உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த அணிதிரட்டல் திட்டத்தின்படி, நாட்டின் இராணுவமல்லாத மொத்தப் படையின் பலத்தை சுமார் 400,000 ஆக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், மத்திய மற்றும் மாகாண மட்டங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இந்த தன்னார்வப் படையில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிய வருகின்றது.
இந்தத் துணைப் படையில் சேர விரும்பும் தன்னார்வலர்களுக்கு, தற்போதுள்ள இராணுவ வீரர்களுக்கு இருப்பதை விட, இலகுவான தகுதிகளும் கட்டுப்பாடுகளும் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.