சென்னை:
தன் மீது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்துள்ள உரிமை மீறல் புகார் முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்றும், நிதி நிர்வாக நடைமுறைகளைத் திட்டமிட்டுத் திரித்துக் கூறுவதாகவும் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு அறிக்கை வாயிலாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது விளக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
-
புகாரின் பின்னணி: கடந்த திமுக ஆட்சியில் (14.1.2026) அரசாணை எண் 6-ன் மூலம், 2026-27-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூ.2,000 கோடியில் முன்கூட்டியே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதில் அரசியலமைப்பு விதிகள் மீறப்பட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார் கூறியிருந்தார்.
-
சட்டப்பேரவை ஒப்புதல்: 2026-27-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.21,132 கோடியில், முன்கூட்டியே நிர்வாக அனுமதி பெறப்பட்ட இந்த ரூ.2,000 கோடியும் அடங்கும். இதற்குச் சட்டப்பேரவையின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதால், நிதித்துறையின் ஒப்புதலின்றி இது நடைபெற்றதாகக் கூற முடியாது.
-
ஆளுநரின் உத்தரவு: ஜனவரி 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த அரசாணையில் நிதித்துறையின் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதுடன், இறுதியாக ‘ஆளுநரின் உத்தரவுப்படி அரசுச் செயலரால்’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தனிப்பட்ட முடிவல்ல: இது தனது தனிப்பட்ட முடிவோ அல்லது சட்டப்பேரவையின் நிதி அதிகாரத்தை மீறிச் செய்யப்பட்ட செலவோ அல்ல. இத்தகைய அரசாணைகள் இதற்கு முன்பும் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
-
பழிவாங்கும் ஆயுதம்: நிர்வாக அனுமதியையும் (Administrative Sanction), நிதி செலவினத்தையும் (Financial Expenditure) அமைச்சர் குழப்பிக்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்ட எ.வ. வேலு, சட்டப்பேரவை உரிமை மீறல் என்பதைப் பழிவாங்கும் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், தான் பேரவை மாண்பை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Hashtags:
#EVVelu #AadavArjuna #DMK #TVKGovt #TNAssembly #BreachOfPrivilege #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #TamilNews #BreakingNewsTamil