2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின தேசிய விழாவை இம்முறை மாத்தறையில் நடத்துவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டிற்கான உலகளாவிய கருப்பொருளாக “உரிமைகள், நீதி, செயல், அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக” என்பதை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச கருப்பொருளுக்கமைய இலங்கையின் தேசிய மட்டத்திலான பிரதான கொண்டாட்டங்களை மாத்தறை ருகுணு பல்கலைக்கழகத்தின் இரவீந்திரநாத் தாகூர் மண்டபம் மற்றும் மாத்தறை கடற்கரைப் பூங்கா ஆகிய இடங்களில் நடத்துவதற்குப் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
பெண்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், நாட்டின் தேசிய அபிவிருத்திச் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதே இந்த வருட தேசிய விழாவின் பிரதான நோக்கமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்முறை தேசிய விழாவை கொழும்புக்கு வெளியே நடத்துவதன் ஊடாக கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை கிராமிய மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் சமூகத்திற்கு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கிய பெண்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளன. இந்த தேசிய விழாவிற்கான இலங்கைக்கே உரித்தான தேசிய கருப்பொருள், உத்தியோகபூர்வ இலச்சினை மற்றும் முழுமையான நிகழ்ச்சி நிரல் தொடர்பான விபரங்கள் அமைச்சு மட்டத்தினால் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.