பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெடிவிபத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஷியா முஸ்லிம் மசூதியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) தொழுகையின் போது நடத்தப்பட்ட கொடூர தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர், 169 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல், பாகிஸ்தான்நாட்டில் மீண்டும் தீவிரவாத அச்சத்தை எழுப்பியுள்ளது.
தலைநகரின் ஷெஷாத் டவுன் பகுதியில் அமைந்துள்ள தர்லாய் இமாம்பர்கா என்ற ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளடன.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மசூதியின் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தற்கொலை குண்டுதாரியை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். இருப்பினும், அவர் உடனடியாக தன்னைத்தானே வெடிக்கச் செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நுழைவாயிலில் இருந்தவர்கள் மற்றும் அருகில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் கடுமையாகபாதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உறுதியாக தெரியவில்லை என்றும், ஆனால், அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்கட்டது. ஆனால், இந்த கொடூர தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.