இஸ்ரேலில் பாலைவனத்தை சோலைவனமாக்கியவர் என்ற பெருமைக்குரியவரும், இந்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உயரிய ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதை வென்றவருமான எலியாகு பெசலேல், 95, உடல் நலக்குறைவால் காலமானார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த எலியாகு பெசலேல், 1955ல் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்தார். ஆடு மேய்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். விவசாயத்தில் ஆர்வமுள்ள அவர், அங்கு நெகேவ் என்ற பாலைவன பகுதியில் முதல் குழாய் நீர் கொண்டு வரப்பட்டதும் சிறிய அளவில் பயிரிடத் தொடங்கினார்.
பின்னர், இஸ்ரேலை உலகின் இரண்டாவது பெரிய ரோஜா ஏற்றுமதியாளராக உயர்த்தினார். இஸ்ரேலில் முதல் நவீன கிரீன்ஹவுஸ் எனப்படும் பசுமை பண்ணையை நிறுவியவரும் இவரே.
சிறந்த ஏற்றுமதியாளர் விருது, பணி உற்பத்தி திறனுக்கான கப்லான் விருது உள்ளிட்ட ஏராளமான இஸ்ரேல் விருதுகளை எலியாகு வென்றுள்ளார். இஸ்ரேலில் வசித்தாலும் இந்தியா மீது எப்போதும் பற்று கொண்டிருந்தவரான எலியாகு, ‘என் தாய்நாடு, என் தந்தை நாடு’ என்ற தலைப்பில் நுால் ஒன்றையும் எழுதியிருந்தார்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் உயரிய ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது, 2006ல் அவருக்கு வழங்கப்பட்டது. உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு இஸ்ரேல் அரசும், மக்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.