36 வருடங்கள் பழமை வாய்ந்த கொழும்பு சேர்க்ள் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இவ்வருடத்தின் தலைவர் லயன் கணேஷ்வரன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு, ஜிந்துப்பிட்டியில் நீதிராஜா மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக லயன்ஸ் மாவட்டம் 306 டி4 இன் ஆளுநர் லயன் மகேஷ் கட்டுலந்த மற்றும் இரண்டாவது உப ஆளுநர் லயன் தினேஷ் தியாகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மாதம் நீரிழிவு நோய்க்கான விழிப்புணர்வு மாதம் என்பதால் லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் பலரால் நீரிழிவு பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனையும் நடாத்தப்பட்டு மருந்துகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
அத்தோடு, கண் பரிசோதனை செய்யப்பட்டு 650 பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.அதனை தொடர்ந்து கொழும்பு, மருதானை, கப்பித்தாவத்தையைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கு பாடசாலை புத்தகப் பைகளும் மற்றும் அப்பியாச புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் லயன்ஸ் மாவட்டம் 306 டி4 சார்பாக லயன் அஜித் கோராலே மற்றும் லயன் பூர்ண விஜயசிங்க, கொழும்பு சேர்க்ள் லயன்ஸ் கழகம் சார்பாக லயன் குலேந்திரன், லயன் விமலேந்திரன், லயன் ராச குலசிங்கம், லயன் அமிர்த நாயகம், லயன் சுலக்ஷனா மற்றும் கொழும்பு சேர்க்ள் லியோ கழகத்தின் தலைவர் லியோ விதுஷன் மற்றும் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
லயன்ஸ் மாவட்டம் 306 டி4 இன் இரண்டாவது உப ஆளுநர் லயன் தினேஷ் தியாகராஜா கருத்து தெரிவிக்கையில்,
இந்த சமூக நலத்திட்டம் கொழும்பு சேர்க்ள் லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்களின் அனுசரணையுடன் இலவசமாக முன்னெடுக்கப்பட்டது. இன்றைய இந்த சமூக நலத்திட்டங்களை முன்னின்று ஒழுங்குப்படுத்திய வைத்தியர் லயன் குணாலனுக்கு நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன், நீரிழிவு சம்பந்தமான விளக்கங்களுடன் புத்தகம் ஒன்றும் வைத்தியர் லயன் குணாலனால் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்த புத்தகத்தை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கவுள்ளோம். வீட்டு தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக தக்காளி, மிளகாய் போன்ற செடிகளையும் வழங்கினோம் என்றார்.