ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளையின் அழைப்பின் பேரில், இலங்கையின் சுகாதார, ஊடக மற்றும் அஞ்சல் சேவைகள் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ், மற்றும் நீதித்துறை அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார ஆகியோர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னருடன் இணைந்து இந்த பயணத்தில் பங்கேற்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகலில் லண்டனில் வந்தடைந்தவுடன், அவர்களின் முதல் உத்தியோகபூர்வ நிகழ்வாக லண்டன் ஆல்பர்டன் பாடசாலை அரங்கில் கூடிருந்த இலங்கை சமூகத்தினரைச் சந்தித்தனர்.
ஐக்கிய இராச்சிய தேசிய மக்கள் சக்தி (NPP) கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், அரசியல் சார்பின்றி பெருமளவிலான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
இலங்கை சமூக உறுப்பினர்கள், அரசின் முன்னேற்றம், பொருளாதாரக் கொள்கைகள், தேசிய பிரச்சினை, மற்றும் தமிழர், முஸ்லிம் சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமைச்சர்களிடம் நேரடியான கேள்விகளை எழுப்பினர்.
அமைச்சர்கள் அதற்கு பதிலளிக்கும்போது, இதுவரை அரசாங்கம் மேற்கொண்ட அரசியல் சீர்திருத்தங்கள், மக்களுக்கு வழங்கப்பட்ட பொருளாதார நிவாரணங்கள், மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் சிறப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த முயற்சிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கினர்.
மேலும் ஒரு செழிப்பான நாடை உருவாக்கவும், மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நடைமுறையில் உள்ள நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றி கூறியதுடன், பல துறைகளில் அதற்கான அடித்தளம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஐக்கியராச்சியத்தில் இதற்கு முன் எந்த அரசாங்கத்தின் அமைச்சர்களும் மக்களுடன் இவ்வாறு திறந்த உரையாடலில் ஈடுபட்டதில்லை என்றும், இங்கிலாந்து அமைச்சர்களே கூட தங்கள் குடிமக்களுக்கு இத்தகைய வாய்ப்புகளை அரிதாகவே வழங்குகிறார்கள் என்றும் பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கை வெளிநாட்டு வாழ் சமூகத்தினர், அரசாங்கத்தின் இத்தகைய முயற்சிகளைப் பாராட்டி, அரசியல் அல்லது இன வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் தற்போதைய நிர்வாகத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
ஐக்கியராச்சியத்தில் தங்கியிருக்கும் காலத்தில், அமைச்சர்கள் அங்குள்ள இலங்கை அறிஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களையும் சந்தித்து மேலதிக கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.