இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டார்.
அவசரகாலச் சட்டத்தை இந்த அரசு ஒடுக்குமுறைக்காகப் பயன்படுத்துகின்றது எனவும், எனவே, அந்தச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ரஞ்சித் மத்தும பண்டாரவின் இந்தக் குற்றச்சாட்டைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நிராகரித்தார்.
அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசமைப்பு விதிகளின் கீழ், ஜனாதிபதியால் ஒரு மாத காலத்துக்கு மட்டுமே அவசரகால நிலையை அறிவிக்க முடியும். அதனை நீடிக்க வேண்டுமெனில் அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
அதற்கமையவே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.