வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) அருகில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கப்பல்களை அரசாங்கம் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தக் கப்பல்கள் இலங்கையின் இறையாண்மைக்குட்பட்ட எல்லைக்கு வெளியே நிலைகொண்டுள்ளதால், இலங்கை அவற்றிற்கு எந்தவித பொறுப்பையும் ஏற்காது என்றும், எந்தவொரு வசதிகளையும் வழங்கி வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டேங்கர்டிரேக்கர்ஸ் (TankerTrackers) இணையதளத்தின் தரவுகளின்படி, ஈரானைச் சேர்ந்த சுமார் 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தங்களது தாய்நாட்டின் துறைமுகங்களுக்குச் செல்ல முடியாமல், இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளன. அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகை காரணமாகவே இக்கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை அடைய முடியவில்லையெனக் கூறப்படுகிறது.
இதன்படி, ஈரானியக் கொடியுடன் கூடிய சுமார் 13 எண்ணெய் தாங்கிக் கப்பல்களும், தடைகளிலிருந்து தப்பிச் செல்லும் “நிழற்படை” (shadow fleet) எனக் குறிப்பிடப்படும் பல கப்பல்களும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் EEZ பகுதிக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக டேங்கர்டிரேக்கர்ஸ் தெரிவித்துள்ளது. எனினும், இக்கப்பல்களில் தற்போது எவ்வித எரிபொருளும் கொண்டு செல்லப்படவில்லை என்றும் அவ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கை கடலோரத்திலிருந்து வெறும் 19 நார்ட்டிக்கல் மைல் தொலைவில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ‘ஐரிஸ் டெனா’ (IRIS Dena) என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களுக்கும் தாக்குதல் அபாயம் உள்ளதாக அந்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், சர்வதேச சட்டத்தின்படி, ஒரு நடுநிலை நாட்டின் கரையோரத்திலிருந்து 12 நார்ட்டிக்கல் மைல் வரை பரந்துள்ள பிராந்தியக் கடற்பரப்பிற்குள் இருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் டேங்கர்டிரேக்கர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது