இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் துணை நிறுவனமான தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனம் ஏற்பாடு செய்த, இலங்கைப் பொதுமக்களை தொற்றாத நோய்களில் இருந்து பாதுகாத்தல் மற்றும் உடற்பயிற்சி மூலம் புனர்வாழ்வளித்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கை தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக விளையாட்டுப் போஷாக்கு விரிவுரையாளராகப் பணியாற்றிய கலாநிதி ஜயந்த தசநாயக்க அவர்கள் வழிநடத்தினார்.
அங்கு, அரச சேவையில் உள்ள அதிகாரிகளும் முழுச் சமூகமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கு உடற்பயிற்சியைப் பயன்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் தொற்றாத நோய்களால் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையான சூழ்நிலையைத் தணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தினசரி வாழ்க்கையில் வயது, இளம், வயோதிப பேதமின்றி அனைவரும் தவறாமல் உடற்பயிற்சிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், இதன் மூலம் தற்போது 80% ஆக உள்ள தொற்றாத நோயாளர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் குறைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விரிவுரையில், தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. சஜித் ஜயலால், முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. சிசிர த சில்வா, தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் பதிவாளர் திரு. சமன் சமரகோன், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி. வாசனா பிரேமரத்ன, விளையாட்டு மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி சானக்க த சில்வா, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் அதிகாரிகள், அத்துடன் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
By C.G.Prashanthan