தமிழர்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் வென்றெடுக்க உழைப்போம் – தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு உறுதி
தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக்குழுவின் டேம் சியோபைன் மெக்டொனாக் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பதுடன் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் தாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டினை அக்குழுவின் உறுப்பினர்கள் மீளுறுதிப்படுத்தியுள்ளனர்.
தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவின் இந்த ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டம் அண்மையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள், பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்பான பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அதன்படி இக்கூட்டத்தில் தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவராக டேம் சியோபைன் மெக்டொனாக் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.
அதேபோன்று பிரதித் தலைவர்களாக உமா குமாரன், பொபி டீன், லூயி பிரென்ஞ் ஆகியோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
அதேவேளை இவ்வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது இலங்கைத் தமிழர்களுக்கான பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நிலையான சமாதானம் என்பன உள்ளடங்கலாக கரிசனைக்குரிய முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக மரபணு பரிசோதனைக்கான (டி.என்.ஏ) தரவு வங்கி உருவாக்கல் திட்டம், சர்வதேச நீதிமன்றம் அல்லது ஏனைய சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறைகளை நாடுவதற்கான வழிமுறைகள், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கததின் அரசியல் போக்குகள் மற்றும் இன்னமும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை மேலும் வலுப்படுத்தல், இந்தியாவில் இடம்பெற்றுவரும் தெளிவூட்டல் முயற்சிகள், வடக்கு – கிழக்கு மக்களுக்கான இழப்பீடு, மீள்குடியேற்றம், மீளக்கட்டியெழுப்பல் என்பவற்றை இலக்காகக்கொண்ட நடவடிக்கைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும், நிலையான அமைதி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதிலும் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டினை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக்குழுவின் உறுப்பினர்கள் மீளுறுதிப்படுத்தினர்.