சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் விளக்கம் கொழும்பு IDH வைத்தியசாலையில் இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு ‘ஒண்டான்செட்ரான்’ (Ondansetron) தடுப்பூசிதான் காரணமா என்பது குறித்து இதுவரை உறுதியாகத் தௌிவுபடுத்தப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுத் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினாலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களின் மரணப் பரிசோதனை மாதிரிகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, குறித்த நோயாளிகள் உயிரிழப்பதற்கு முன்னரே ‘ஒண்டான்செட்ரான்’ தடுப்பூசியின் 4 தொகுதிகளை (Batches) வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
பின்னர் இந்த மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து, அந்த மருந்தின் ஏனைய அனைத்து தொகுதிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
மேலும், குறித்த உற்பத்தி நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏனைய 10 மருந்து வகைகளையும் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மருந்து இறக்குமதி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி மனுஜ் சி. வீரசிங்க, மருந்து இறக்குமதியானது அமைச்சர்களாலோ அல்லது அரசாங்கத்தாலோ தீர்மானிக்கப்படும் செயல்முறை அல்ல என்பதைத் தௌிவுபடுத்தினார்.
“மருந்து இறக்குமதி என்பது அமைச்சர்கள் அல்லது அரசாங்கங்களின் விருப்பப்படி நடப்பதில்லை. சுகாதார அமைச்சின் வருடாந்தத் தேவைக்கமைய டெண்டர் கோரப்பட்டு, கொள்முதல் குழுக்களின் ஊடாகவே இந்தச் செயல்முறை முன்னெடுக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான மருந்துகள் தேவை எனில், அதற்கான டெண்டர் 2024 இல் கோரப்படும். ஒரு ஓடர் வழங்கி மருந்து நாட்டிற்கு வருவதற்கு குறைந்தது 11 மாதங்கள் வரை எடுக்கும்.
மருந்துகளை நினைத்த நேரத்தில் கடையில் வாங்குவது போல் வாங்க முடியாது. அவற்றை உற்பத்தி செய்ய நீண்ட காலம் எடுக்கும். இந்த நடைமுறை கடந்த காலத்திலும் இப்படியே இருந்தது, இப்பொழுதும் இப்படியே தொடர்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.