சீனாவின் மிக முக்கியமான வருடாந்திர அரசியல் கூட்டமான ‘இரு அமர்வுகள்’ (Two Sessions) அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், 9 இராணுவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 19 சட்டமியற்றுபவர்களை சீன அரசு பதவியிலிருந்து நீக்கியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
நீக்கப்பட்டவர்களில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தரைப்படை தளபதி லி கியோமிங் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி ஷென் ஜின்லாங் போன்ற உயர்மட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்ட ஜெனரல் ஜாங் யூக்ஸியா, “ஒழுக்க மற்றும் சட்ட விதிமீறல்கள்” (ஊழல் என்பதற்கான குறியீட்டுச் சொல்) காரணமாக சில வாரங்களுக்கு முன்பு பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2013 ஆண்டு பதவியேற்றது முதல், ஷி ஜின்பிங் உயர்மட்ட மற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் என யாரையும் விட்டுவைக்காமல் ஊழல் தடுப்பு வேட்டையை நடத்தி வருகிறார். இருப்பினும், தனது அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்காகவே ஷி ஜின்பிங் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெய்ஜிங்கில் மார்ச் 4 முதல் 11 வரை நடைபெறவுள்ள இந்த ‘இரு அமர்வுகள்’ கூட்டத்தில், சீனாவின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டம் மற்றும் பொருளாதார இலக்குகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.