நியூசிலாந்துக்கெதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியை இந்தியா வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளையும் வென்று தொடரைக் கைப்பற்றுவதை இந்தியா ஏற்கெனவே உறுதி செய்ததோடு, நான்காவது போட்டியை நியூசிலாந்து வென்ற நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் சூரியகுமார் யாதவ் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, இஷன் கிஷனின் 103 (43), சூரியகுமாரின் 63 (30), ஹர்திக் பாண்டியாவின் 42 (17), அபிஷேக் ஷர்மாவின் 30 (16) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 272 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து சார்பாக பின் அலென் 80 (38), இஷ் சோதி 33 (15), றஷின் றவீந்திர 30 (17), டரைல் மிற்செல் 26 (12) ஓட்டங்களைப் பெற்றபோதும் அர்ஷ்டீப் சிங் (5), அக்ஸர் பட்டேல் (3), வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங்குவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.4 ஓவர்களில் 225 ஓட்டங்களையே பெற்று 46 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக கிஷனும், தொடரின் நாயகனாக சூரியகுமாரும் தெரிவாகினர்.