இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை. பயனாளர்களின் விபரம் மாத்திரமே கோரப்பட்டுள்ளது. கொடுப்பனவு இடைநிறுத்தியதாக குறிப்பிட்டு ஒரு தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிரான தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற அமர்வின்போது பாதுகாப்பு அமைச்சரின் பிரதிநிதியாக விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்படும் ‘மௌபிய’ கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் தவறான செய்தியை சமூகமயப்படுத்தியுள்ளார்கள். இந்த கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இராணுவ வீரர் ஒருவரின் பெற்றோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும். அவர்கள் உயிருடன் இருக்கும் வரையில் இராணுவத்தால் இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்படுகின்ற நிலையில் அவர்கள் உயிரிழந்ததன் பின்னர் மரண சான்றிதழை இராணுவத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற பொது அறிவித்தல் குறித்த பயனாளர்களின் குடும்பத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பெற்றோர் உயிரிழந்ததன் பின்னர் தகவல் வழங்கும் வீதம் மிகவும் குறைவானதாகவே காணப்பட்டது. ஒருவர் உயிரிழந்ததன் பின்னர் அவர் சார்ந்த கொடுப்பனவுகளை பிறிதொருவர் முறையற்ற வகையில் பெற்றுக்கொள்வது அரச நிதி முறைகேடாக கருதப்படும்.
இராணுவத்தினரது பெற்றோருக்கான ‘மௌபிய’ கொடுப்பனவு தொடர்பில் வருடத்தில் இரண்டு முறை தகவல் கோரப்படும். கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர் உயிருடன் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இவ்வாறு தகவல் கோரப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தகவல் கோரப்பட்ட போதும் முழுமையான விபரங்கள் அளிக்கப்படவில்லை. இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் இராணுவ சேவை பிரிவு குறித்த கொடுப்பனவை விடுத்துள்ளது.
இராணுவத்தினரது பெற்றோருக்கான கொடுப்பனவை இடைநிறுத்த எவ்வித தீர்மானத்தையும் பாதுகாப்பு அமைச்சு எடுக்கவில்லை. ஒரு தரப்பினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இராணுவத்தினரதும் அவர்களின் குடும்பத்தினரினதும் நலன் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.
ஊடக சுதந்திரம் பொய்யுக்கு இடமளிக்காது – சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்
நாட்டில் தீ மூட்டுவதற்வோ, பொய்யில் அரசியல் செய்யவோ எதிர்க்கட்சித் தலைவர் முயற்சிக்க கூடாது. ஊடகவியலாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டமை தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். ஒருசில ஊடகங்கள் இந்த நாட்டில் தீ வைத்துள்ளன. வைத்தியர் சாபி விடயத்தில் எவ்வாறு நடந்து கொண்டது. ஊடக சுதந்திரத்திற்காக நாங்கள் முன்னிருப்போம். ஊடக சுதந்திரத்துக்குள் இருந்துக் கொண்டு தவறான விடயங்களை சமூகமயப்படுத்த முடியுமா? கடவுளாக இருந்தாலும் ஊடகமாக இருந்தாலும் பொய் கூறினால் அதற்கு எதிராக எதிர்க்கட்சி முன்னிலையாக வேண்டும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
பொதுமக்கள் பொலிஸ் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக சிவில் பாதுகாப்பு குழு தலைவரிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்,
இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உரையாற்றிய சபை முதல்வர், பொலிஸ் பதிவுகளை பெறும் போது சிவில் பாதுகாப்பு குழு தலைவரிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என சுற்றுநிருபங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பலமுறை சபையில் குறிப்பிட்டு, விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார். நாட்டில் தீயை மூட்டுவதற்கு முயற்சிக்கவோ, ,பொய்யில் அரசியல் செய்யவோ முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏதேனும் உதாரணங்களை காட்டி கூறலாம். ஆனால் அமைச்சர் இங்கு பொறுப்புடன் அதுபற்றி பாராளுளுமன்றத்தில் விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.இந்நிலையில் உங்களின் பதவியுடன் நீங்கள் இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படலாம். தயவு செய்து பொய்கூற வேண்டாம். மக்களே இதனால் பாதிக்கப்படுவர். உங்களுக்கு அரசியல் இலாபம் கிடைக்கலாம். அதற்காக இல்லாத விடயங்களை குறிப்பிட வேண்டாம்.
பொதுமக்களுக்கு நற்சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சிவில் பாதுகாப்பு குழுக்களிடம் அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விளக்கமளித்துள்ளார். உங்களுக்கு இதில் இன்னும் தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அமைச்சருடன் கலந்துரையாட முடியும். இந்த நாட்டை பொறுப்பேற்கவுள்ளவர் என்றுதானே கூறுகின்றீர்கள். இந்த நிலைமையில் எப்படி உங்களிடம் நாட்டை ஒப்படைப்பது.
இதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டமை தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.ஒருசில ஊடகங்கள் இந்த நாட்டில் தீ வைத்துள்ளன. வைத்தியர் சாபி விடயத்தில் எவ்வாறு நடந்துகொண்டது. ஊடக சுதந்திரத்திற்காக நாங்கள் முன்னிருப்போம்.ஊடக சுதந்திரத்துக்குள் இருந்துக் கொண்டு தவறான விடயங்களை சமூகமயப்படுத்த முடியுமா, கடவுளாக இருந்தாலும் ஊடகமாக இருந்தாலும் பொய் கூறினால் அதற்கு எதிராக எதிர்க்கட்சி முன்னிலையாக வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொலிஸ் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் வேண்டுமென்றால் ஊர், பெயர் விபரங்களுடன் தகவல்களை முன்வைக்கின்றேன். அக்மிமன மற்றும் கம்புறுப்பிட்டிய பொலிஸ் நிலையங்களில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் செல்லும் போது இவ்வாறு நடக்கின்றது என்பதனை நான் உண்மையாகவே கூறினேன். இதில் பொய்கள் ஏதும் இல்லை என்றார்.