வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் மொன்தா புயல், அதன் கிழக்கு கடற்கரையில் பலத்த காற்று மற்றும் மழையை ஏற்படுத்தவுள்ள நிலையில், திங்கட்கிழமை (27) இந்தியா 50,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ஆந்திரா மற்றும் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் அவசரகால ஊழியர்களுக்கான விடுமுறைகளை அதிகாரிகள் இரத்து செய்து, பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டனர்.
இந்த புயல் செவ்வாய்க்கிழமைக்குள் கடும் புயலாக மாறி, பின்னர் ஆந்திரப் பிரதேசத்தின் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
“காக்கிநாடா மாவட்டத்தில் கடற்கரைக்கு அருகில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது ” என ஆந்திரப் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அதன்படி, சுமார் 50,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அறிக்கை காட்டுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து குடும்பங்களை மாற்ற அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் விரைந்துள்ளன. அங்கு 3.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.