தங்காலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் சடலங்களின் மீது ஐஸ் கட்டிகளை அடுக்கி, அவற்றை பிணவறைக்கு முன்னால் உள்ள வராந்தாவிலேயே வைக்கும் அவலநிலை காணப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இடவசதி இல்லாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெலியத்த, நாக்குலுகமுவ, ரன்ன, அங்குணகொலபெலஸ்ஸ, வீரகெட்டிய போன்ற பிரதேச மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் உயிரிழப்பவர்கள் மற்றும் விபத்துக்களில் பலியாகும் நபர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கே அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பரிசோதனைகள் நிறைவடையும் வரை சடலங்கள் அங்கேயே வைக்கப்படுகின்றன. இருப்பினும், கடந்த 4 வருடங்களாக வைத்தியசாலையில் போதியளவான குளிரூட்டி வசதிகள் இல்லாமை ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பழைய பிணவறையில் ஒரே நேரத்தில் 6 சடலங்களை வைக்கக்கூடிய குளிரூட்டி வசதி இருந்த போதிலும், அது தற்போது மீண்டும் திருத்த முடியாத அளவுக்குப் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய பிணவறையில் தற்போது 2 சடலங்களை மட்டுமே வைக்கக்கூடிய வசதி உள்ள நிலையில், அது போதுமானதாக இல்லை என ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாகவே சடலங்களைப் பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (12) காலை பிணவறை சடலங்களால் நிரம்பி வழிந்ததால், சடலங்களை வண்டிகளில் வைத்து அவற்றின் மேல் ஐஸ் கட்டிகளை அடுக்குவதற்கு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஐஸ் வைக்கப்பட்ட 3 சடலங்கள் பிணவறைக்கு வெளியேயுள்ள வராந்தாவிலும், மற்றொரு சடலம் குளிரூட்டிக்கு வெளியேயுள்ள வண்டியிலும் வைக்கப்பட்டிருந்தன.
உயிரிழந்தவர்களின் உறவினர்களையே ஐஸ் கட்டிகளைக் கொண்டு வருமாறு கோரப்பட்டதால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தப் பிணவறை இடநெருக்கடி குறித்து நீண்டகாலமாக சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரையில் எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை என வைத்தியசாலை ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.