வங்கக் கடலில், சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், சென்னை எண்ணுார், ஹிந்துஸ்தான் பல்கலை ஆகிய இடங்களில் தலா, 15 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 9 வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.