இலங்கையின் ரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையைச் சேர்ந்த 20 நிபுணர்கள் அடங்கிய குழு, 2025 டிசம்பர் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்து, சிறப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்தக் குழுவில், இலங்கை ரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் இரத்தினம் வெட்டுதல் மற்றும் மேம்படுத்துதல் (cutting & polishing) பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த பயிற்சி நிகழ்ச்சி, 2025 ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, இருதரப்பு திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இலங்கை நிபுணர்களுக்காக ஆண்டுதோறும் 700 தனிப்பயன் பயிற்சி வாய்ப்புகளை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது.
20 நாட்கள் நீடித்த இந்தப் பயிற்சி நிகழ்ச்சி, இந்திய அரசின் ஏற்பாட்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள இந்திய இரத்தினம் மற்றும் ஆபரண நிறுவனம் (Indian Institute of Gem & Jewellery) மூலம் நடத்தப்பட்டது.
இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையின் முழுமையான மதிப்புச் சங்கிலியையும் (value chain) உள்ளடக்கிய தொழில்நுட்ப மற்றும் கருப்பொருள் சார்ந்த அம்சங்களைப் பயிற்சித் திட்டம் கொண்டிருந்தது.
இதன் கீழ், இரத்தினம் பிரித்தல் மற்றும் வெட்டுதல், முன் வடிவமைத்தல், வடிவமைப்பு, வெட்டுதல் மற்றும் முகத்திடல் (faceting), மெருகூட்டல், தர மதிப்பீடு, தொழில்துறை அனுபவப் பகிர்வு போன்ற முக்கிய அம்சங்கள் பயிற்சியாக வழங்கப்பட்டன. இதன் மூலம் பங்கேற்றவர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தி, வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் திறன்களை வலுப்படுத்தும் நோக்கம் முன்னெடுக்கப்பட்டது.
அனுபவ அடிப்படையிலான கற்றல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முன்னணி இரத்தின உற்பத்தி நிறுவனங்களுக்கு பயிற்சியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன் மூலம், நவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள், வடிவமைப்பு மேம்பாட்டு செயல்முறைகள் மற்றும் இந்திய இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையின் நவீன சில்லறை விற்பனை நடைமுறைகள் குறித்து நேரடி அனுபவம் பெற்றனர்.
இந்த சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி, தொழில்முறை திறன்களை வலுப்படுத்துவதோடு, அறிவுப் பரிமாற்றத்தையும் ஊக்குவித்து, இந்தியா–இலங்கை இரத்தினம் மற்றும் ஆபரணத் துறைகளுக்கிடையிலான நிறுவன மற்றும் தொழில்துறை தொடர்புகளை மேலும் ஆழப்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
மக்கள் மையமாகக் கொண்ட பொருளாதார ஒத்துழைப்புக்கும் திறன் மேம்பாட்டிற்குமான இரு நாடுகளின் தொடர்ந்த உறுதிப்பாட்டை இது பிரதிபலிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.