வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் ஆசிரிய மாணவர்கள் சிலர் வவுனியா வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த இரு தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து அம்மாணவர்கள் பலர் ஒரே வகையில் திடீர் சுகயீனம் அடைந்தமைக்கான காரணங்களை அறியும் பொருட்டு தேசிய கல்வியற் கல்லுாரியில் சோதனை நடத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆசிரிய மாணவர்களுடனும் கலந்துரையாடப்பட்டிருந்த போது, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி குடிநீரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் உணவின் தரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் சுகாதார சீர்கேடாக காணப்படும் பகுதிகளை சீர் செய்வதற்கும் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும், ஆசிரிய மாணவர்கள் திடீர் சுகயீனமுற்றமைக்கான காரணம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 40 வரையான ஆசிரிய மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக அண்மையில் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.