நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பாரிய மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்;
இந்த ஆண்டில் மின்சார உற்பத்திக்காக 25 நிலக்கரி கப்பல்களை விநியோகிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட ‘ட்ரைடென்ட் கெம்பர்’ எனும் இந்திய நிறுவனமானது இதுவரை 13 கப்பல்களை மாத்திரமே இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளது.
ஏப்ரல் மாத இறுதிக்குள் 25 நிலக்கரி கப்பல்களையும் தரையிறக்க வேண்டிய கட்டாயம் உள்ள போதிலும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு கப்பல் கூட நாட்டை வந்தடையவில்லை என்பது பாரிய சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது. ஏப்ரல் மாத இறுதியில் பஸ்நாயக்க கடற்பரப்பில் ஆரம்பமாகும் பருவக்காற்று நிலைமை காரணமாக நிலக்கரி இறக்கும் பணிகள் பாதிக்கப்படும் என்பதால் தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம் மொத்த விநியோகத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.
பாராளுமன்றத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி திட்டமிடப்பட்ட எண்ணிக்கையை விட ஐந்து கப்பல்கள் குறைவாக வந்தாலும் ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு இல்லையெனில் அதிக விலைக்கு டீசல் மூலம் இயங்கும் வெப்ப மின்நிலையங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும்.