அல்லப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் குறித்த தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவல்துறை பொலிஸ் உத்தியோதர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
துப்பாக்கிச் சூட்டு இலக்காகி உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் பயன்படுத்திய வாகனத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதில் காணப்பட்ட தடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம்.
மேலும் உயிரிழந்த நபரின் உறவினர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோதர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்படுவதோடு சம்பவ தினத்தில் அன்று கடமையில் இருந்த ஏனைய பதவி நிலை உத்தியோத்தர்களிடம் பெறப்படவுள்ளது.
மேலும் உயிரிழந்த நபரின் உடற் கூற்று பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறாத நிலையில் அறிக்கை கிடைத்ததும் அது தொடர்பில் மேலதிக கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.