தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ரெட்ட தல’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘மான் கராத்தே’, ‘கெத்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெட்ட தல’. இதில் அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பொபி பாலச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக் குழுவினருடன் திரைப்பட இயக்குநர்கள் ஏ ஆர் முருகதாஸ் – அறிவழகன் – முத்தையா – ஏ ஆர் கே சரவணன்- கோகுல்- ஏ ஆர் கே சரவணன் – பாலாஜி வேணுகோபால்- ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” பட மாளிகைக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு மறக்க இயலாத அற்புதமான தருணங்களையும், அனுபவத்தையும் வழங்கும் வகையில் ‘ரெட்ட தல’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். அனைவரும் நத்தார் தினத்தன்று பட மாளிகைக்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதனிடையே இந்த திரைப்படத்தின் நீளம் இரண்டு மணி தியாலத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும், படத்தின் திரைக்கதை எதிர்பார்க்காத வேகத்தில் இருக்கும் என்றும் படக்குழுவினர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.