வெள்ளத்தால் சேதமடைந்த அரிசி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக இருந்த நிலையில் அவை சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு விடப்பட்ட ஒரு மோசடியை பொது சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டி மாவட்டத்தின் ஹரிஸ்பத்துவ பகுதியில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது சுமார் 1,000 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட அரிசியை பறிமுதல் செய்ததாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்தார்.
இந்தநிலையில் நாடு முழுவதும் இதேபோன்ற மோசடி நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வணிகங்களை வலியுறுத்துவதாகவும் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அரிசியை வாங்கும் போது, குறிப்பாக இந்த நேரத்தில், விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை அவர் கோரியுள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்தவர்கள்,சுகாதார அமைச்சகத்தின் பேரிடர் முகாமைத்துவப் பிரிவின் 24 மணி நேர துரித இலக்கமான 1926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.