அரசாங்கத்துடன் எமக்கு எவ்வித இரகசிய ஒப்பந்தமோ இணக்கப்பாடோ இல்லை. கடந்த ஆட்சி காலங்களில் தான் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் இரகசியமாக கூட்டணியமைத்தன. ஐக்கிய மக்கள் சக்தியில் அவ்வாறு எவரும் செயற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராகியுள்ளன.
எவ்வாறிருப்பினும் அந்த எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என பிரதான எதிர்க்கட்சியாக நாம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருக்கின்றோம். எனினும் எதிர்க்கட்சிகளை முடக்கும், அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நாம் நிச்சயம் குரல் கொடுப்போம்.
அந்த பேரணியில் பங்கேற்றாவிட்டாலும், அதற்கான ஆதரவை வழங்குவோம். அரசாங்கத்துக்கு எதிராக நுகேகொடையில் மாத்திரமின்றி, நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சி தலைமைத்துவத்தின் தீர்மானங்களை ஏற்று அதற்கமையவே செயற்படுவோம் என்ற உறுதி மொழிக்கமையவே நாம் செயற்படுவோம். நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணியால் அரசாங்கம் சற்று அச்சமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
அரசாங்கம் கூறிய அனைத்து பொய்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மக்களும் அவற்றை உணர ஆரம்பித்துள்ளனர். ஓராண்டு என்ற குறுகிய காலத்துக்குள் மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஆணையை அரசாங்கம் இழந்துள்ளது.
அந்த வகையில் இந்த அரசாங்கத்தின் இயலாமையை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பொறுத்தமான நேரத்தில் நடவடிக்கை எடுக்கும். 21ஆம் திகதி எதிர்ப்பு பேரணியை வெற்றியை முழு நாடும் அறிந்து கொள்ளும்.
அரசாங்கத்துடன் எமக்கு எவ்வித இரகசிய ஒப்பந்தமோ இணக்கப்பாடோ இல்லை. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் திரை மறைவில் இரகசிய கூட்டு அமைத்துள்ளதாயின், நாம் அமைதியாகவே இருப்போம். மாறாக அரசாங்கத்துக்கு எதிராக பேசிக் கொண்டிருக்க மாட்டோம். கடந்த ஆட்சி காலங்களில் தான் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் இரகசியமாக கூட்டணியமைத்தன.
ஐக்கிய மக்கள் சக்தியில் அவ்வாறு எவரேனும் செயற்பட்டால், உரிய நேரத்தில் மக்கள் அதற்கு தக்க பதிலை வழங்குவர். ஆனால் அவ்வாறு எவரும் செயற்பட மாட்டார்கள் என்று நம்புகின்றேன் என்றார்.