பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், அம்பாறை மாவட்டம் தம்பட்டை, தம்பிலுவில், திருக்கோவில் மற்றும் விநாயகப்புரம் ஆகிய பகுதி உறவுகளின் ஏற்பாட்டில், நுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தின் லெமெரியர், தங்ககலை, எல்ஜின், டயகம, வேவர்லி, சந்திரிகாமம், ராகலை, ரம்பொடை, கொட்டகலை மற்றும் நோர்வூட் போன்ற பிரதேசங்களில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிவாரணப் பொதிகளில் அரிசி, பருப்பு, சீனி, பிஸ்கட் வகைகள், டின்மீன், சோயா, பால்மா, ஆடைகள், சிறுவர்களுக்குத் தேவையான பவுடர் மற்றும் கிறீம் வகைகள், தேங்காய், நூடுல்ஸ், கோதுமை மா உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குத் தேவையான சுகாதாரப் பொருட்களும் உள்ளடங்கியிருந்தன.
இந்நிவாரணப் பொருட்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பதற்கு, அம்பாறை மாவட்ட இராணுவக் கட்டளைத் தலைமையகத்தின் பிரதான அதிகாரி லியனகேவின் ஆலோசனையின் பேரில், இராணுவ அதிகாரி டி.சில்வா தலைமையிலான இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பொருட்கள் முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதற்கான வழிகாட்டல் மற்றும் உதவிகள் ஊடகவியலாளர் க.சுந்தரலிங்கம் மற்றும் அவரது குழுவினரால் வழங்கப்பட்டன.