நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தொடர்ந்தும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதற்கான இயலுமை தொடர்பில் அவநம்பிக்கை எழுந்துள்ளது.சிறைச்சாலைக் கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அலட்சியமாகவே செயற்பட்டுள்ளார்.அதன் விளைவாகவே 31 பேர் உயிரிழந்துள்ளனர். சிறந்த அரசியல் கலாசாரத்தை பேணுவதாக இருந்தால் அவர் சுய விருப்பத்துடன் பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற அமர்வில் நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கைதிகளின் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட சிறைக்கைதிகள் உள்ளடங்களாக 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இது நாட்டின் அண்மைக்கால வாலாற்றில் சிறைச்சாலையொன்றினுள் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமாக இந்த சம்பவம் அமைந்திருப்பதுடன, இதன் மூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு முகாமைத்துவம் குறித்து கடுமையான பிரச்சினைகள் எழுந்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையின் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகாணங்களைப் பாதுகாப்பாகப் பேணத் தவறியமை மற்றும் கைதிகளுக்கிடையிலான மோதல்களைத் தடுப்பதற்கான அத்தியாவசிய பூர்வாங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமை போன்றன சிறைச்சாலை நிர்வாகத்தின் பாரதூரமான திறமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது.
முறையான முன்திட்டமிடல் எதுவுமின்றி, அரச அலுவலர்களான சிறைச்சாலை அலுவலர்களை மோதல் நடந்த இடத்திற்கு அனுப்பியதன் மூலம் அந்த அலுவலர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கப்பட்டுள்ளது.சிறைச்சாலை முறைமையினுள் கைதிகள் மற்றும் அலுவலர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான இறுதிப் பொறுப்பை நீதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரே வகிக்கின்றார். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
2024 நவம்பர் மாதம் 25 ஆம் திகதிய 2412/ 08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் நீதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்தமைத்தல் மற்றும் செயற்படுத்துதல், சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்பு, சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் நெரிசல்களைக் குறைத்தல் ஆகிய பணிகளைப் பொறுப்புடன் நிறைவேற்றவில்லை.
‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தினுள் சிறைச்சாலைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு அமைச்சர் தவறியதன் மூலம், மக்கள் வழங்கிய மக்கள் ஆணையை மீறியுள்ளார். இந்த காரணங்களுக்கு அமைவாக,நீதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தமக்கு கையளிக்கப்பட்டுள்ள கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றவில்லை என்பதனாலும், அதேபோன்று, அவரது கடமைகள் குறித்து அமைச்சர் பொறுப்புக்கூறல் இன்றி செயற்படுகின்றார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தொடர்ந்தும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதற்கான இயலுமை தொடர்பில் அவநம்பிக்கை எழுந்துள்ளது.சிறைச்சாலைக் கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அலட்சியமாகவே செயற்பட்டுள்ளார்.