அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு விதிக்கப்படவிருந்த தடையை நீக்கும் வகையில், அதன் அமெரிக்க செயல்பாடுகளை டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு பெற்ற முதலீட்டாளர் குழுவிடம் ஒப்படைக்க அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ‘TikTok USDS Joint Venture LLC’ என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்கப் பயனர்களின் தரவுப் பாதுகாப்பு, அல்காரிதம் பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றை கண்காணிக்கும்.
டிக்டொக்கின் தாய் நிறுவனமான சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் (ByteDance), புதிய நிறுவனத்தில் வெறும் 19.9 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்கும். மீதமுள்ள பெரும்பான்மை பங்குகள் அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருக்கும்.
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஒரக்கிள் (Oracle), சில்வர் லேக் (Silver Lake) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் MGX ஆகிய நிறுவனங்கள் இதில் முக்கிய முதலீட்டாளர்களாக உள்ளனர்.
புதிய நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) ஆடம் பிரஸ்ஸர் (Adam Presser) நியமிக்கப்பட்டுள்ளார். இதன் 07 பேர் கொண்ட பணிப்பாளர் குழுவில் பெரும்பான்மையினர் அமெரிக்கர்களாக இருப்பார்கள்.
இந்த ஒப்பந்தம் குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இந்த விவகாரத்தை ஒரு அழகான முடிவுக்குக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள டிக்டொக், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி அதனைத் தடை செய்யவோ அல்லது விற்கவோ கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.