2026 ஜனவரி மாதம் முதல் ஐக்கிய அமெரிக்க நாடுகள் இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதியை இடைநிறுத்தவுள்ள நிலையில், நண்டுத் தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் பாலூட்டிகளைப் பாதுகாக்கும் ஒரு அமெரிக்க முயற்சியின் பகுதியாக இந்த ஏற்றுமதித் தடை விதிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 7,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகின்றது. கடல் பாலூட்டிகள் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்குவதைக் குறிக்கும் சான்றிதழை வழங்குவதில் இலங்கை தாமதம் காட்டியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களை இரண்டு ஆண்டு காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க இலங்கை தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து நெடுந்தீவு வரையான வடக்கு இலங்கையின் கடலோரப் பகுதி, அமெரிக்காவிற்கு நீல நண்டுகளை (Blue Crabs) ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஏற்றுமதி மூலம் மாதத்திற்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நாணயம் ஈட்டப்படுகிறது.இந்த ஆண்டு வடக்கில் புதிதாக நான்கு நண்டு பதப்படுத்தும் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
இவை, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பலரை உள்ளடக்கிய சுமார் 2,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கின.
இந்த இறக்குமதித் தடை தற்போது அவர்களின் ஒரே வருமான ஆதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.தடை நடைமுறைக்கு வந்த பின்னரே, அதை நீக்குவது குறித்து அமெரிக்க அரசாங்கம் மீளாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கின் கடற்றொழில் சமூகங்களிடையே பெரும் பொருளாதார நெருக்கடி குறித்த அச்சம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.