நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘அமரன்’ திரைப்படம் வெளியாயிற்று.
இத்திரைப்படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற உலக கலாசார திரைப்பட விழாவில் ‘அமரன்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த வருடத்திற்கான டாப் 10 ஊக்கமளிக்கும் படங்கள் லிஸ்டில் ‘அமரன்’ திரைப்படம் இடம்பிடித்தது. இதன் மூலம் அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேஜர் முகுந்த் பிறந்தநாளையொட்டி ‘அமரன்’ படக்குழு வீடியோ வெளியிட்டது.
அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி , பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவையொட்டி கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் பதாகை மற்றும் காணொளி வெளியிட்டுள்ளது.