தென்காசி, நெல்லைக்கு இன்று (நவ.,24) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நாளை (நவ.,25) 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் (நவ.,26) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இவ்வாறு உருவாகும் புயலுக்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் பரிந்துரைப்படி, ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய கடல்பகுதிகளில் 3 சுழற்சிகள் ஒன்றாக காணப்படுகின்றன. நேற்று அந்தமான் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று(நவ.24) மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரினை பகுதிகளில் காணப்படுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்.
பின்னர், அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும். குமரி பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக, நாளை(நவ.25) குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர், அது வலுவடைய வாய்ப்பு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது. 4 இடங்களில் அதி கனமழையும், 15 இடங்களில் மிக கனமழையும், 76 இடங்களில் கனமழையும் பதிவாகி இருக்கிறது.
நவ.26ம் தேதி 7 மாவட்டங்களிலும், 27ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, தஞ்சை,திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நவ.28ல் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவ 29ம் தேதி வடகடலோரத்தைச் சேர்ந்த 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.