சபுகஸ்கந்த பகுதியில் கவனயீனமாக வாகனத்தைச் செலுத்தி 6 மாதப் பச்சிளம் குழந்தை உட்பட 3 பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக்க ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவரமண்டிய தெனிமுல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இரவு 7.45 மணியளவில் முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக்க ரன்வல பயணித்த ஜீப், முன்னாள் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறம் மோதி, எதிர் திசையிலிருந்து வந்த கார் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்துச் சம்பவத்தில் காரில் பயணித்த 6 மாதங்கள் பூர்த்தியான பச்சிளம் குழந்தை, குழந்தையின் தாய் (25) மற்றும் பாட்டி (55) ஆகிய மூவரும் காயமடைந்திருந்தனர்.
இந்த, சம்பவம் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், வாகனத்தைச் செலுத்தியபோது சந்தேகநபரான அசோக்க ரன்வல மதுபோதையில் இருந்தாரா என்பதற்கான வைத்திய பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வலவிடமிருந்து பெற்ற இரத்த மாதிரி அரச இரசாயனபகுப்பாய்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கை கிடைத்தவுடன் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
அத்தோடு, அவர் செலுத்திய ஜீப் வண்டியில் நீண்டகாலம் பராமரிக்கப்படாத இயந்திரக் கோளாறு இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இவ்விடயம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதேவேளை, விபத்துச் சம்பவத்தை அடுத்து கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல 12ஆம் திகதி கைது செய்யப்பட்டு, மாளிகாகந்த நீதிவானின் உத்தரவுக்கமைய பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் மஹார நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்த நிலையில், மஹார நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாளிகாகந்த நீதிவான் ஜானகி பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேரில் வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.