விஜய் – சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ப்ரண்ட்ஸ் ‘ திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியிடப்படுகிறது. இதற்காக புதுப்பிக்கப்பட்ட இப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பேரரசு – பொன் குமரன் -கௌதம் ராஜ் – ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் மறு வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் அப்பச்சனிடம் பேசி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட திரு. ஷானு பேசுகையில், ” இப்படத்தின் புதுப்பிக்கும் பணிகள் 70 நாட்களுக்கு மேல் நடைபெற்றது. இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்காக ஒலியமைப்பில் நவீன வடிவத்தை இணைத்திருக்கிறோம்.
ஒவ்வொரு காட்சியையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வண்ண கலவையை சீர்படுத்தி நல்லதொரு திரை அனுபவத்தை வழங்குவதற்காக உழைத்து இருக்கிறோம்.
இந்த திரைப்படத்தை தற்போதைய தலைமுறை ரசிகர்கள் பார்த்தால்.. அவர்களுக்கு சிரிப்பு வரும். அனைவரும் பட மாளிகைக்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.