தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பமாகும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் நேற்று வியாழக்கிழமை (23) அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜுக்கும் தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கம் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய ஏற்பாடுகளை உறுதி செய்வதற்காக முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இலங்கைப் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை பேணவும் மேம்படுத்தவும் நிறுவப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு, விரைவில் தனது உத்தியோகபூர்வப் பணிகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன, தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் ரமணி ஜயசுந்தர, ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.