பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உயிருடன் இருக்கும் நிலையில் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தர்மேந்திரா ஓய்வு எடுத்து வருகிறார். அவரின் 90வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட குடும்பத்தார் முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தர்மேந்திராவின் சகோதரரும், நடிகருமான வீரேந்திராவின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி பேசப்படுகிறது. வீரேந்திராவின் மகன் ரந்தீப் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். டிராவல் vlogger ஆக இருந்து வருகிறார் தீப்தி.
ராம் சாஸ்திரா இந்தி படம் மூலம் தன் சினிமா கெரியரை துவங்கிய தீப்தி, கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடித்த தர்ம சக்கரம் படம் மூலம் கோலிவுட் வந்தார். காமா, சிநேகிதியே ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்கிறார் தீப்தி. கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் படங்களில் நடிக்கவில்லை.
உத்தர பிரதேசத்தில் பிறந்த தீப்தி கைவினைப் பொருட்கள் வியாபாரம் செய்ய மும்பைக்கு வந்தார். வந்த இடத்தில் அவரின் அழகை பார்த்து மாடலிங் வேலை கிடைத்தது. மேலும் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.