வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலமான பட்டப்படிப்புத் துறைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களின் பிரதேசங்களில் ஒன்றாகிய வவுனியாவில் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கலைத்துறை உட்பட ஏனைய துறைகள் அனைத்தும் தாய்மொழியில் கற்பிக்கக்கூடியதாக குறிப்பாக தமிழ்மொழியில் கற்பிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி அங்கு பல்கலைக்கழகம் முழுமை பெறுவதற்கு கல்வியாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்வி அமைச்சரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
எவ்வளவோ மாணவர்கள் பல்கலை அனுமதியின்றி வெளியில் நிற்பதால்தான் பல்வேறு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். எனவே வவுனியாவில் தூர நோக்கோடு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் தமிழ் மாணவர்களுக்கு தமிழ்மொழி மூலம் கற்கும் மாணவர்களுக்கு உரிய முறையில் பயன் பெறவேண்டும். அந்த நோக்கை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்வி அமைச்சரும் துரித கதியில் முயற்சிகளை எடுக்கவேண்டும்.
போதிய நிலவசதியும் எதிர்கால திட்டமிடலுக்கு ஏற்றவாறாக ஏற்பாடுகளுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிந்து சென்ற பல்கலைக்கழகம் முழுமை பெறாவிட்டால் அது அர்த்தமில்லை. எனவே இந்த விடயத்தில் அனைவரும் அக்கறை கொள்ளவேண்டும்.
வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தரும் வவுனியா பல்கலைக்கழக பேரவையினரும் தமிழ்மொழி மூலமான கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து பல்கலைக்கழகத்தை முழுமை பெற செய்யவேண்டும் என்றார்.