புதிதாக வெளியிடப்பட்ட சமூக-பொருளாதார அறிக்கையில் வறுமை மற்றும் வாழ்க்கைத்தரம் தொடர்பான பழைய மற்றும் காலாவதியான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் திருத்தப்பட்ட புதிய அறிக்கையை வெளியிடுமாறு கோரியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி மற்றும் தொகையியல் புள்ளிவிவரத் திணைக்களம் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், வீட்டு வருமானம், செலவீனம், வறுமை, மற்றும் வசிப்பிடம் தொடர்பான பிரிவுகளில் 2016 முதல் 2019 வரையிலான பழைய தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மற்றைய பிரிவுகளில் 2023 முதல் 2025 வரையிலான அண்மைய காலத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளை மதிப்பிடுவதற்கு மட்டும் ஏன் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் பயன்படுத்தப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஒரு நபர் 30 நாட்களுக்குத் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ. 17,315 போதுமானது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் கடுமையாக விமர்சித்தார். பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு நாடு இதுவரை புதுப்பிக்கப்பட்ட வீட்டு வருமான மற்றும் செலவினக் கணக்கெடுப்பை நடத்தவில்லை என்றும், நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு அரசாங்கம் இந்தத் தவறான வறுமைப் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தப் போகிறதா என்றும் அவர் வினவியுள்ளார்.
உலக வங்கியின் தரவுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், வறுமைக்கோடு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு $8.30 (சுமார் ரூ. 2,724) ஆக உள்ளது என்றும், நாட்டின் உண்மையான வறுமை விகிதம் 65.4% ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 33% குடும்பங்கள் தீவிர உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.