மும்பையில் காஞ்சூர் மார்க் பகுதியில் உள்ள தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், இந்தியாவின் அதிவேக ரயிலான “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ், வெள்ள நீரை இருபுறமும் கிழித்துப் பாய்ச்சிக்கொண்டு சென்ற காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக பலத்த மழை பெய்துவந்த நிலையில், தாழ்வான பகுதிகளும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அதேபோன்று காஞ்சூர் மார்க்கில் உள்ள குறித்த ரயில் தண்டவாளங்களும் வெள்ள நீரில் மூழ்கிவிட்டன. இந்நிலையில், அங்குள்ள தண்டவாளம் ஒன்றில் தொலைவிலிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த “வந்தே பாரத்” எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தை கிழித்து இருபுறமும் நீரை சிதறி வீசியபடி பாலத்தை கடந்துசென்றது.
ரயில் சென்றபோது வெள்ள நீர் பல அடி உயரத்துக்கு மேலே இருந்த மேம்பாலத்தின் மீது வரை சிதறுண்ட காட்சி அடங்கிய காணொளி, தற்போது சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.