வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வரவேற்பதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இத்திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், விவசாயம், மீன்பிடி, காணிப் பயன்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் சமூகங்களின் நலன்களை முழுமையாகக் கருத்திற்கொண்டு திட்டமிட வேண்டும் என வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திக்கான மூலோபாய சுற்றாடல் மதிப்பீடு தொடர்பான முதலாவது வழிகாட்டல் குழுக் கூட்டம் இன்று (11.11.2026) புதன்கிழமை கொழும்பிலுள்ள மின்சக்தி அமைச்சில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வழிகாட்டல் குழுவின் உறுப்பினரான வடக்கு மாகாண ஆளுநர், ஆளுநர் செயலகத்திலிருந்து இணையவழி ஊடாகப் பங்கேற்று தனது கருத்துகளை முன்வைத்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன் முன்னெடுக்கப்படும் இவ்வாய்வு, வடக்கு மாகாணத்தின் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் தரையில் அமைக்கப்படும் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான சாத்தியமான பகுதிகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கை நிலைபேறான எரிசக்தி அதிகார சபை இத்திட்டத்தின் செயற்பாட்டு நிறுவனமாகவும், மத்திய சுற்றாடல் அதிகார சபை அங்கீகார நிறுவனமாகவும் செயற்படுகின்றன. ஜப்பானைச் சேர்ந்த ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் நிறுவனம், இலங்கையின் ஆலோசனைப் பொறியியலாளர்கள் மற்றும் கட்டடக்கலைஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
இவ்வாய்வில், ஏற்கெனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பகுதிகளும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய தேசியத் திட்டங்களின் கீழ் சாத்தியமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. 2026–2030 காலப்பகுதியை மையமாகக் கொண்ட எரிசக்தி அபிவிருத்தித் திட்டமிடலை 2040ஆம் ஆண்டு வரையான நீண்டகால நோக்கிலும் ஆராய்வதற்கான அணுகுமுறை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் முக்கிய நோக்கம் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு ஏற்ற பகுதிகளை அடையாளம் காண்பது மாத்திரமல்ல, அத்தகைய அபிவிருத்திகளால் ஏற்படக்கூடிய சுற்றாடல், சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்களை முன்கூட்டியே மதிப்பிட்டு, பொருத்தமான திட்டமிடல் வழிகாட்டல்களை உருவாக்குவதுமாகும். இதன் அடிப்படையில், மேம்பாட்டுக்கு அனுமதிக்க முடியாத பகுதிகள், கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே மேம்படுத்தக்கூடிய பகுதிகள், தேவையான தாக்கத் தணிப்பு நடவடிக்கைகளுடன் மேம்படுத்தக்கூடிய பகுதிகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தக்கூடிய பகுதிகள் எனப் பகுதிகளை வகைப்படுத்துவதற்கான ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.
இவ்வாய்வில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக உணர்திறன் கொண்ட பல்வேறு அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட பகுதிகள், உணர்திறன் மிக்க வாழிடங்கள், புலம்பெயர் பறவைகளின் பயணப் பாதைகள் மற்றும் இயற்கைச் சூழல்களின் தொடர்பிணைப்பு ஆகியவை சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய அம்சங்களாகக் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அதேபோன்று, குடியிருப்புகள், காணி உரிமை மற்றும் பயன்பாடு, விவசாயம், மீன்பிடி, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்கள் ஆகியவை சமூக ரீதியான மதிப்பீட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலும், சூறாவளி, கடல்கொந்தளிப்பு, கடல் மட்ட உயர்வு மற்றும் வெள்ள அபாயங்கள் போன்ற காலநிலை மாற்றம் சார்ந்த ஆபத்துகளும், அபிவிருத்தித் திட்டங்கள், கரையோரப் பாதுகாப்பு எல்லைகள், கலாசார மரபுரிமை மற்றும் இயற்கை நிலத்தோற்றங்கள் மீதான தாக்கங்களும் மதிப்பீட்டில் உள்ளடக்கப்படுகின்றன. காற்று மற்றும் சூரிய வளங்களின் சாத்தியக்கூறுகளுடன் மின்விநியோகக் கட்டமைப்பு, மின்சாரப் பரிமாற்றப் பாதைகள் மற்றும் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளும் ஆராயப்படுகின்றன.
இதற்கு முன்னதாக, யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பங்குதாரர்களுடனான கலந்தாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணக் கலந்தாய்வில் விவசாயம், மீன்பிடி, மக்களின் வாழ்வாதாரங்கள், சமூகக் காணிப் பயன்பாடு, சுற்றுலா, கலாசார மரபுரிமை மற்றும் காலநிலை அபாயங்கள் தொடர்பான உள்ளூர் மற்றும் பிராந்தியக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. கொழும்பில் நடைபெற்ற கலந்தாய்வில் பாதுகாக்கப்பட்ட வாழிடங்கள், பறவைகளின் இடம்பெயர்வு மற்றும் மோதல் அபாயங்கள், திட்டமிடல் அளவுகோல்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு ஆகிய தேசிய மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் ஆராயப்பட்டன.
இவற்றைத் தொடர்ந்து, கள ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே திரட்டப்பட்ட இடஞ்சார் தரவுகளைச் சரிபார்த்தல், உணர்திறன் மிக்க பகுதிகள் மற்றும் காலநிலை அபாயங்களை அடையாளம் காணுதல், சாத்தியமான அபிவிருத்தித் திட்டங்களால் ஏற்படக்கூடிய முரண்பாடுகளை மதிப்பிடுதல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறைந்த, நடுத்தர மற்றும் உயர்ந்த அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றின் ஒட்டுமொத்த சுற்றாடல் மற்றும் சமூகத் தாக்கங்களும் ஆராயப்படும்.
ஆய்வின் நிறைவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு வலயங்களை அடையாளப்படுத்துவதுடன், அவற்றுக்கான மூலோபாய சுற்றாடல் முகாமைத்துவத் திட்டத்தையும் தயாரிப்பது எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்கால எரிசக்தி அபிவிருத்தித் திட்டங்களைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் தேசிய அபிவிருத்தி நோக்கங்களுடன் இணங்கிய வகையில் திட்டமிடுவதற்கான வழிகாட்டல் கட்டமைப்பை உருவாக்க முடியும்.
தேசிய எரிசக்திக் கொள்கையின் கீழ், 2030ஆம் ஆண்டளவில் மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்வதும், 2050ஆம் ஆண்டளவில் மின்சார உற்பத்தித் துறையில் காபன் நடுநிலையை அடைவதும் இலக்குகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய தேசிய இலக்குகளை அடைவதில் வடக்கு மாகாணத்தின் எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இக்கலந்துரையாடலில் தனது கருத்துகளை முன்வைத்த ஆளுநர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி என்பது மாகாணத்துக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளையும் பொருளாதார முன்னேற்றத்துக்கான சந்தர்ப்பங்களையும் உருவாக்கக்கூடியது எனத் தெரிவித்தார். அதனை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய திட்டங்களுக்காகக் காணிகள் அடையாளம் காணப்படும்போதும், அபிவிருத்தி நடவடிக்கைகள் திட்டமிடப்படும்போதும் அப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாதிருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
குறிப்பாக, விவசாய நிலங்கள், மீன்பிடி வளங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து வாழும் மக்களின் பொருளாதாரச் செயற்பாடுகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். மக்களின் காணிப் பயன்பாட்டு உரிமைகள், உள்ளூர் சமூகங்களின் தேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட பகுதிகள் ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்த பின்னரே பொருத்தமான அபிவிருத்திப் பகுதிகள் தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் எரிசக்தி அமைச்சின் செயலாளர் (பதில்) தலைமையில், மத்திய சுற்றாடல் அதிகார சபை, தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை நிலைபேறான எரிசக்தி அதிகார சபை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றன