யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் தொடர்பில் காணி உரிமையாளர்கள் மத்தியில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அவர்கள் நேற்றைய தினம் (புதன்கிழமை) ஒரு விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளன.
“காணி உறுதி உள்ளவர்களின் காணிகள் மட்டுமே அளவீடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால், காணி உறுதி இல்லாதவர்களின் நிலைப்பாடு என்ன? அவர்களுக்கு என்ன தீர்வு?” என்ற கேள்வியை உரிமையாளர்கள் முன்வைக்கின்றனர்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டங்களில் 17 பேரின் காணி உறுதிகள் உண்மையானவை என உறுதி செய்யப்பட்டும், அது குறித்துத் தங்களுக்கு முறையான அறிவிப்புகள் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடற்தொழில் அமைச்சருடன் சமமாக அமர்ந்து ஊடகங்களைச் சந்திக்கத் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதனால் அரசின் மீதான சந்தேகம் வலுவடைந்துள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காணி அளவீட்டுப் பணியானது காணிகளை விடுவிப்பதற்காக மட்டுமே என்பதை எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என அவர்கள் மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அத்தகைய உறுதியை வழங்க மாவட்டச் செயலாளர் மறுத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.